peoplepill id: irai-anbu
IA
India
1 views today
6 views this week
Irai Anbu
Indian writer

Irai Anbu

The basics

Quick Facts

Intro
Indian writer
From
Work field
Gender
Male
Place of birth
Salem, India
Age
60 years
The details (from wikipedia)

Biography


இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள்.

இளமைக் காலம்

1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழும் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் மேற்கொண்ட பேரிடர் மேலாண்மைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இவருடைய திறமை மற்றும் அனுபவம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னால் அதன் மறுசீரமைப்புப் பணிகளைக் கையாளுவதற்காக அந்நாட்டு திட்டக்குழுவின் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.

கல்வி

  • விவசாயத்தில் இளங்கலைப் பட்டம்
  • வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
  • ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
  • தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்
  • உளவியலில் முதுகலைப் பட்டம்
  • வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்
  • ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்
  • மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்
  • இந்தி மொழியில் பிரவீன்
  • சமஸ்கிருதத்தில் கோவிதஹா
  • விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
  • 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

பணியில்

நிர்வாகியாக

இந்திய ஆட்சிப் பணியில் வித்தியாசமான அதிகாரி. சமூக அக்கறை கொண்டவர். அலுவலக நடைமுறைகளில் முழுவதுமாகக் கட்டுண்டு போகாமலும், அதிகாரத்தின் மீது மோகமில்லாமலும் தன் சுயத்தைக் காப்பாற்றி வருபவர். வாழ்க்கையை அடிப்படையான உள்ளுணர்வோடும், படைப்பாக்க உந்துதலோடும், ஆன்மிகப் பார்வையோடும் கண்டறிகிற பயணமாக மாற்றிக் கொண்டவர்.

முப்பது ஆண்டுகளாக அரசின் பல பொறுப்புகளில் பணியாற்றி வருகிறவர். எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர். நேர்மை, பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றை பணியின் தொடக்கத்திலிருந்து தரித்துக்கொண்டவர். நியாயமான நிர்வாகத்தை நடத்துவதுடன் சிறந்த ஆளுகையை தருவதற்காக அரசு இயந்திரத்தை முடுக்கி விடும் இயல்பு கொண்டவர். சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துள்ளார். ஊழல் புரையோடிப்போன பிறகு அழிக்கிற நடவடிக்கையில் ஈடுபடாமல், அது நிகழக்கூடிய நேர்வுகளைத் தெரிந்து அவற்றை முன்கூட்டியே தடுத்தல், முறைகேடுகளை முறியடித்தல் போன்றவை அவருடைய செயல்முறை.

பல்வேறு துறைகளில் இறையன்புவின் செயல்பாடுகள்

உதவி ஆட்சியர், நாகப்பட்டினம் பிரிவு:

  • நாகப்பட்டினம் உதவி ஆட்சியராக இருக்கையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதிலும், வெள்ள நிவாராணப் பணியிலும் முக்கியப் பங்காற்றினார். புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்கான இடம், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு, இதர அலுவலகங்களை நிர்ணயித்தல் ஆகியவற்றை குறுகிய காலத்தில் முடிவு செய்தார். இவருக்கு பொது மக்களுடன் இருந்த நல்லுறவு இப்பணிகளையெல்லாம் திறம்பட முடிப்பதற்கு பேருதவியாக இருந்தது.
  • சிலிக்கான் மண்ணை முறையான படிவங்கள் இல்லாமல் காரைக்காலுக்குக் கடத்திச் சென்றவர்கள் மீது அலுவலக நடவடிக்கைகளை இவர் எடுத்தார். இது முறையான உரிமம் கோரும் முறைக்கு வழியமைத்தது மட்டுமல்லாமல், அரசின் வருமானம் அதிகரிக்கவும் வழி வகுத்தது. இவர் அடிக்கடி மேற்கொண்ட இரவுச் சோதனைகள் ஆற்று மண் கடத்தலைத் தடுத்து நிறுத்தியது.
  • நேரடிக் கொள்முதல் மையங்களின் செயல்பாட்டினை திறமையாகக் கண்காணித்ததனால், அண்டை மாநிலங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக நெல் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
  • நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் எந்த ஒரு சிறு அசம்பாவிதமுமின்றி இவரால் நடத்தப்பட்டன.
  • காவிரி நீர்த் தீர்ப்பாய உறுப்பினர்கள் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்தபோது இடைவெளி இல்லாத மனிதச் சங்கிலியை ஏற்படுத்தியதில் இவரின் பங்கு முக்கியமானது. இது டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை நிலையை தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு உணர்த்துவதில் பேருதவி புரிந்தது.
  • இவர் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெருங்கலவரங்கள் நிறைந்திருந்த நாகப்பட்டினத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற பெருமுயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இவரது பதவிக் காலத்தில் அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. கந்தூரித் திருவிழாவின்போது சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவற்காக இரவுப் பொழுதை நாகூர் தர்காவிலேயே கழித்தார். விநாயகர் சதுர்த்தியின்போது மதக்கலவரங்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வதற்காக விஷ்வரூப விநாயகருடன் ஊர்வலத்தில் நடந்தே சென்றார்.
  • தன்னார்வ நன்கொடைகளை ஊக்குவித்து அவற்றின் மூலம் பல திட்டங்களை செயல்படுத்தினார். நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், பூங்காக்களை அழகுபடுத்துதல், சாலையில் பெயர்ப்பலகைகளை நிறுவுதல், சாலைகளை அமைத்தல் ஆகியவை இவற்றுள் ஒரு சில. பரோபகாரிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று, அவற்றின் மூலம் மதிய உணவு மையங்களைச் சீரமைத்தார். 
  • கடற்கரைப் பகுதிகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக கடற்படைப் பிரிவு ஒன்றை அங்கு நிறுவுவதற்கு உதவியாக இருந்தார்.
  • முழுமையான கல்வித் திட்டத்தை நாகை மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கான ஆரம்பகாலப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார். தற்காலச் சூழலில் கல்வியின் தவிர்க்க முடியா முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதற்காக செய்தி-கல்வி-தகவல் தொடர்பு (IEC) செயல்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்.

கூடுதல் ஆட்சியர், கடலூர் மாவட்டம்:

  • கடலூர் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில், முதல் முறையாக, கடலூர் மத்தியச் சிறைச்சாலையிலிருந்த கைதிகளுக்கு பல்வேறு தொழில்திறன்களுக்கான பயிற்சியை அளித்தார். கிராமப்புர இளைஞர்கள் சுய தொழில்களுக்கான பயிற்சித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, தண்டைனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடா வண்ணம் அக்கைதிகளைத் தடுத்து நிறுத்தியது. 
  • அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் தேக்கு மற்றும் முந்திரித் தோட்டங்களை அறிமுகப்படுத்தினார். காசநோய் மையம், சிறைச்சாலை, பள்ளிகள், மருத்துவமனைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களில் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டன.
  • மாநிலத்திலேயே முதல் முறையாக நரிக்குறவர்களுக்கு கோழிப்பண்ணைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு ஒருங்கிணைந்த கிராமப்புர அபிவிருத்தித் திட்டத்தின் (IRDP) கீழ் வழக்கத்திற்கு மாறான தொழில்களைச் செய்வதற்கு கடன் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.
  • நரிக்குறவர்களுக்கு மாவட்ட பரவலாக்கும் திட்டத்தின் (District Decentralisation Plan) கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.
  • இந்திரா யோஜனா ஆவாஸ் திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளைக் கட்டும் பணி பயனாளிகளுக்கே கொடுக்கப்பட்டது. அதேபோல, பள்ளிக் கட்டடங்களைக் கட்டும் பணிகளை பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கே வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது கட்டுமானத்தின் தரத்தை அதிகரிக்க உதவியதோடு மட்டுமல்லாமல் சேமிப்பிலிருந்து அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உதவியது.
  • கிராமப்புரங்களில் மரங்களை நடுவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டும் பணி மீனவர்களிடமே கொடுக்கப்பட்டு, ஒப்பந்தக்காரர் முறை ஒழிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த சேமிப்பு அவ்வீடுகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்பட்டது. இம்முயற்சியை அரசும் ஏற்றுக்கொண்டு  அதற்கான ஆணையைப் பிறப்பித்தது.
  • பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. பயிற்சிக்குப் பிறகு அவர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கும் வகையில் வங்கிகள் மூலம் கடன் வசதிகளும் அளிக்கப்பட்டன.
  • ஆரோவில்லின் கட்டுமான மையத்துடன் இணைந்து குறைந்த செலவில் கட்டுமானம் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. அழுத்தம் கொடுக்கப்பட்ட மண்பாளங்களும், முன்னுருவாக்கம் செய்யப்பட்ட கூரைப் பொருட்களும் அதில் உபயோகிக்கப்பட்டன.
  • கிராமப்புரப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் (DWCRA) சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. சிற்றுண்டிச்சாலைகள், கோழிப்பண்ணைகள், பொம்மைகள் செய்தல் போன்ற தொழில்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • வங்கிகளின் ஆதரவை எளிதாகப் பெறுவதற்காக கிராமப்புரங்களின் வெற்றிக்கதைகளை உணர்த்தும் வகையில் ஒருங்கிணைந்த கிராமப்புர மேம்பாட்டு விழிப்புணர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கிராமப்புரங்களின் அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவதற்கு இவை பேருதவியாக இருந்தன.
  • முழுமையான கல்வியறிவுப் பிரச்சாரங்களில் இவரின் பங்கு முக்கியமானது. அறிவொளி இயக்கத்தின் முதற்கட்டப் பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.உயிர்வாயுத் தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கிராமப்புரங்களில் பெரிய அளவில் புகையில்லா அடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முழுக்க முழுக்க புகையில்லா அடுப்புகளுக்கு மாறிய கிராமங்கள் `புகையில்லாக் கிராமங்கள்’ என்று அறிவிக்கப்பட்டன.

தனி அலுவலர், எட்டாவது உலகத் தமிழ் மாநாடு:

  • உலகத் தமிழ் மாநாட்டிற்காகக் கூட்டப்பட்ட அனைத்து குழுக்களிலும் இவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 வரை நடத்தப்பட்ட இம்மாநாடு பெரும் வெற்றியடைந்தது.
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட அனைத்து கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்தார். தஞ்சை ஏ.ஆர். மைதானத்தில் நடத்தப்பட்ட அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளையும் முடிவு செய்தார்.
  • வளைவுச்சாலைகள் அமைத்தல், ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கீழ்வழிப் பாலம் அமைத்தல், பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பேரொளிப்பெருக்கு விளக்குகள் அமைத்தல், சிவகங்கைப் பூங்காவைச் சீரமைத்தல், புதிய பேருந்து நிலையத்தை உருவாக்குதல், நினைவுக் கோபுரம் மற்றும் மண்டபம் கட்டுதல், மண்டபத்தில் ராஜராஜசோழன் சிலையை நிறுவுதல், அலங்கார வளைவுகள் அமைத்தல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்தல், அங்கு கரிகாலன் அரங்கத்தைக் கட்டுதல், தஞ்சாவூர் அரண்மனையைப் புனரமைத்தல் போன்ற திட்டங்களைத் தீட்டி, அதற்கான நிதியுதவியையும் அரசிடமிருந்து பெற்றார்.
  • உலகத் தமிழ் மாநாட்டின்போது மூன்று நினைவு மலர்களை வெளியிடுவதில் முக்கியப் பங்காற்றினார். மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஓவியங்களுடன் அச்சிடப்பட்டன. இந்த அழைப்பிதழ்களில் முதல் முறையாக எந்த ஒரு தனி நபரின் புகைப்படமும் இடம் பெறவில்லை.
  • வெளிநாடுகளிலிருந்து வரும் அறிஞர்கள் தாங்கள் விரும்பும் தமிழ்ப் புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ள உதவும் வகையில் புத்தகக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம்:

  • யுனிசெஃப்புடன் தொடர்புபடுத்திக்கொண்டு பல நகராட்சிகளில் UBSP-இன் கீழ் சுய உதவிக் குழுக்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக பல பயிலரங்குகளை இவர் ஏற்பாடு செய்தார்.
  • கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டு `நிலவொளி இயக்கம்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புரங்களிலிருந்த அனைத்து ஏழைப் பெண்களையும் சென்றடைந்த இந்த இயக்கம் அரசுத் திட்டங்கள் தகுதியுடைய குடும்பங்களைச் சென்றடைவதிலும் முக்கியப் பங்காற்றியது. மகளிர் குழுக்கள் பலமடைவதற்காக யுனிசெஃப் நிதியுதவியினை அளித்தது. அதன் உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக செய்தி மடல் ஒன்றும் கொண்டுவரப்பட்டது.

இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை:

  • இப்பதவியிலிருக்கையில் சிறப்பு இலக்கிய மலர் ஒன்றையும், வாராந்திர சுவரொட்டிப் பத்திரிக்கை ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் அரசுச் செய்திகளை ஒலிபரப்ப ஏற்பாடும் செய்தார்.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில் வாராந்திரப் பத்திரிக்கை நிருபர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
  • அரசுத் திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் முதல் முறையாக வாராந்திரப் பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.
  • மக்கள் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்காக தமிழரசுப் பத்திரிக்கையில் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் மூலம் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டன.
  • கேளிக்கைத் தொழிலில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கான விருதுகள் இவரால் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டன.
  • திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான தீர்மானம் அரசின் ஒப்புதலுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக பணி நடவடிக்கைகள் வேகமெடுத்து அரசின் நிதியுதவி சீரமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்:

  • மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தறி நெய்யும் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பெருமுயற்சி எடுத்தார். திடீர் சோதனைகள் நடத்தியும், தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டும் இம்முயற்சி முடுக்கிவிடப்பட்டது.
  • பட்டுத்தறியில் வேலை செய்யும் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக நிலவொளிப் பள்ளிகளை உருவாக்கினார். இப்பள்ளிகளில் படித்த பலர் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை முடித்துள்ளனர். சுமார் 30 மாணவர்களுக்கு அரசு வேலையும் கிடைத்துள்ளது. வேறு பலர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். சுய தொழில் செய்வோரும் உண்டு.
  • காஞ்சிபுரத்தில் 12 நிலவொளிப் பள்ளிகள் இயங்கின. இம்முயற்சியின் வெற்றியால் உந்துதல் பெறப்பட்ட சில கொடையாளிகள் முத்துப்பேட்டையில் இதுபோன்ற பள்ளி ஒன்றினைத் தொடங்கி, `நிலவொளி’ என்ற காலாண்டு இதழையும் பதிப்பித்தனர்.
  • பட்டுத்தறியிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
  • காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தம் பொலிவேற்றம் செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளின் நிதியுதவியுடன் மேம்படுத்துவது என்ற முன்மாதிரி இதனால் உருவாக்கப்பட்டது.
  • செங்கல்பட்டு, மதுராந்தகம், வாலாஜாபேட்டை, திருக்கழுக்குன்றம் மற்றும் மடிப்பாக்கம் பேருந்து நிலையங்களும் இவரால் மேம்படுத்தப்பட்டன.
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், அம்மாவட்டத்திலுள்ள பல நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. புழுதிவாக்கம் பஞ்சாயத்தின் நீர்த் தேவைக்குப் பிரதானமாய் விளங்கிய புழுதிவாக்கம் குளமும் தூர்வாரப்பட்டது.
  • பஞ்சாயத்து யூனியன்கள் வசமிருந்த பொது நிதியை உபயோகித்து பள்ளிகள் சீரமைக்கப்பட்டன. இதனால் படிக்கும் சூழல் மேம்பட்டது.
  • திரையரங்குகளில் திடீர்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதிகமாக வசூல் செய்யப்பட்ட பணம் காட்சியாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. செல்வாக்குப் பெற்றவர்கள், செல்வாக்கில்லாதவர்கள் என்ற பேதமின்றி, தவறு செய்த திரையரங்க உரிமையாளர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
  • மாவட்ட ஆட்சியராகப் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே மண் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். மண் கடத்தும் வலைப்பின்னல் உடைக்கப்பட்டு, சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட லாரிகள் முடக்கப்பட்டன. பல உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன. லாரிகளில் மண் எடுத்துச் செல்லும்போது தார்ப்பாயைக் கொண்டு மண்ணை மூட வேண்டும் என்ற விதி கட்டயாமாக்கப்பட்டது; மீறுபவருக்கு அபராதம் போடப்பட்டது. 
  • மாவட்ட முழுவதிலிருமிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த அரசின் நிலங்கள் மீட்கப்பட்டன. ஏரிக்கரை மற்றும் கால்வாய்களிலிருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகாமலிருக்க மீட்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய்களும், மதகுகளும் அமைக்கப்பட்டன.
  • தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சட்டத்திற்கு விரோதமாக இயங்கிக்கொண்டிருந்த மாட்டுக்கறிக் கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடம் பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டது. இது மீண்டும் ஆக்கிரமிப்புகள் நிகழாவண்ணம் பாதுகாத்தது.
  • மேடும் பள்ளமுமாக இருந்த இடுகாடுகள் சமன்செய்யப்பட்டு சுற்றுச் சுவர்கள் எழுப்பப்பட்டன.
  • கோயில் குளங்களும் புனரமைப்பு செய்யப்பட்டன. மாமல்லபுரத்திலுள்ள ஸ்தலசயனப்பெருமாள் கோயில் நெடுங்காலத்திற்குப் பிறகு சீரமைக்கப்பட்டு படகுத் திருவிழாவும் நடத்தப்பட்டது. காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளமும், பொய்கை ஆழ்வார் குளமும் புனரமைக்கப்பட்டன. ரங்கசாமி குளத்தின் சுற்றுச் சுவர்களில் சரித்திர நிகழ்வுகளும், குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற இடம்சார் ஓவியங்களும் தீட்டப்பட்டன. இக்குளம் சித்திரைக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
  • மரம் நடுதல் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் வளர்ந்த மரங்கள் நடப்பட்டன. நடப்பட்ட மரங்கள் அனைத்தும் வேர்விட்டு கிளை பரப்பின.
  • மாறுபட்ட வகையில் பெருந்திரள் தொடர்பு நிகழ்வுகள் (Mass Contact Programmes) நடத்தப்பட்டன. இந்நிகழ்விடங்களில் கால்நடை சிகிச்சை முகாம்,  விதை விற்பனை மையம், குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. விண்ணப்பங்களைப் பெற்ற உடனேயே விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சலவைக்காரர்கள் மற்றும் முடிதிருத்துபவர்களுக்கு உபகரணங்கள்ஆகியவை வழங்கப்பட்டன. பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கால்நடை மருந்தகங்களுக்கெதிரே மாதிரி தீவனப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. பால்கொடுக்கும் விலங்குகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டன. பின்னாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால்நடை பாதுகாப்புத் திட்டத்திற்கு இந்நிகழ்வு முன்னோடியாக அமைந்தது.
  • ஓட்டுநர்களுக்கு நிலவி வந்த தேவையைக் கருதி, இளைஞர்களுக்கு வாகனமோட்டும் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியாளர்களுக்கு உடனடியாக பயண முகவர் நிறுவனங்களில் வேலையும் கிடைத்தது.
  • யுனிசெஃப்பின் உதவியுடன் பள்ளிகளில் மகிழ்ச்சியுடன் படிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது.  கற்கும் நிகழ்வை கொண்டாடத்தக்கதாக மாற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
  • நான்கு கோடி ரூயாய் அளவு நிதி சேகரிக்கப்பட்டு அரசு கல்வி நிறுவனங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
  • பல்வேறு மூலாதராங்களிலிருந்து நிதியினை சேகரித்து அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவனையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைக்கு கல்பாக்கம் அணு மின் நிலையம் காமா ரேடியோ மீட்டரை (Gamma Radio Meter) அளித்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உதவியுடன் கூடுதல் படுக்கைத் தொகுதி ஒன்றும் கட்டப்பட்டது. அண்டை  மாநிலங்களிலிருந்தும் வருகிற ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் இம்மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர், சவக்கிடங்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. 
  • கற்குவாரிகளில் கற்களை வெட்டியெடுக்கும் பணி சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த வருமானம் அவர்கள் ஏழ்மைக் கோட்டைத் தாண்டிட உதவியது.
  • யுனிசெஃப்பிடமிருந்து கிடைத்த நிதியுதவியுடன் குழந்தைத் தொழிலாளர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
  • சமுதாயத்தில் அடிமட்டத்தில் வாடுகின்ற மக்களுக்கு பெரிய அளவில் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. தொகுப்பு வீடுகளும் அவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டன.
  • சிறு சேமிப்பு மற்றும் கொடிநாள் வசூலில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக விருதுகளும் வழங்கப்பட்டன.
  • கைவிடப்பட்ட வீராணம் திட்டக் குழாய்களைக் கொண்டு குறைந்த செலவில் பல பாலங்கள் கட்டப்பட்டன.
  • மாவட்ட சிறுசேமிப்பு ஊக்கத் தொகைகளைக் கொண்டு சமுதாயக்கூடங்களும், விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டன.
  • அரிசி ஆலை மற்றும் குவாரிகளில் வேலை செய்து வந்த பல கொத்தடிமைகளை விடுவித்து, அவர்களுக்கு புனர்வாழ்வு வசதிகளும் அளிக்கப்பட்டன.
  • மீனவர்கள் மற்றும் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கான தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பயனாளிகளிடமே ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் கட்டுமானப் பணிகளை அக்கறையுடன் மேற்பார்வையிட்டு கட்டுமானத்தின் தரத்தை உயர்த்திக்கொண்டார்கள்.
  • காஞ்சிபுரத்திலுள்ள பொழுதுபோக்குப் பூங்காக்களிடமிருந்து கேளிக்கை வரி வசூலிப்பதற்கான தீர்மானம் இவரால் முன்மொழியப்பட்டது.
  • தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகளின் உதவியுடன் பிரசித்திபெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோயில் மாமரம் மறு உயிரளிப்பு செய்யப்பட்டது.
  • பொன்னேரிக்கரை சாலையை அகலப்படுத்தி, தெரு விளக்குகளை நிறுவி, அந்த ஏரியில் படகுக்குழாம் அமைப்பது காஞ்சியைச் சொந்த ஊராகக்கொண்ட அப்போதைய முதலமைச்சர்  அண்ணாவின் கனவாக இருந்தது. இந்தக் கனவை இவர் நனவாக்கினார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் செயலராக இருக்கையில் இந்தச் சாலையை நான்குவழிப் பாதையாக மாற்றிட 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கான அரசு ஆணையைப் பெற்றுத் தந்தார்.
  • திருமுக்கூடல் பாலம் உயரம் குறைந்த தாழ்வுப் பாலமாக இருந்து வந்தது. மழைக்காலங்களில் இப்பாலம் மூழ்கிப்போய் கிராம மக்களின் போக்குவரத்தை வெகுவாகப் பாதித்தது. மறு பக்கம் சென்றடைய மக்கள் பல மைல்கள் அதிகமாக பயணப்பட வேண்டியிருந்தது. இவர் பெருமுயற்சி எடுத்து முறையான பாலம் ஒன்றினை அங்கு கட்டி பொதுமக்களின் துயர் துடைத்தார்.

கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம்:

  • இப்பதவியிலிருக்கையில் கால்நடைகளின் மருத்துவத்திற்காக முகாம்கள் அமைத்திட உதவி செய்த கால்நடை பாதுகாப்புத் திட்டம் உருவானதில் இவரின் பங்கு முக்கியமானது.
  • உழவர் சந்தைகளை அமைத்தல், கால்நடைப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல், நுண்கடன் வசதிகளை பலப்படுத்துதல், சிற்றுந்துத் திட்டத்தினை வேகப்படுத்துதல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றினார்.
  • மாநிலம் முழுவதும் பாலங்களைக் கட்டுதல் மற்றும் சாலைகளை அமைத்தல் போன்ற பணிகள் கள ஆய்வின் மூலம் தொடர்ந்து மேற்பார்வையிடப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்பட்டன.
  • அதேபோல் அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் கள ஆய்வின் மூலம் முடுக்கிவிடப்பட்டு நிலவர அறிக்கைகள் முதலமைச்சரின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
  • மதிய உணவு மையங்களில் அயோடின் கலந்த உப்பை உபயோகிப்பது முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.
  • நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை இணைக்கும் சாலைகள் விரைந்து முடிக்கப்பட்டன.
  • முதியோர் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை:

  • இப்பணியிலிருக்கும்போது முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
  • செய்திக் குறிப்புகளை இ-மெயில் வாயிலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் முறையையும் நடைமுறைப்படுத்தினார்.

செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை:

  • சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைச் செயலராக பணியாற்றும்போது சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் வகையில் `விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்` என்ற புதிய திட்டத்தை உருவாக்கினார். அத்திட்டத்தில் தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையம், கோயில்கள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மாநிலம் முழுவதும் சுற்றுலா நட்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநர்களுக்கு ஆட்டோ உரிமம் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம், வாழ்க்கைத் திறன்  மேம்பாட்டுப் பயிற்சி, சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு அவர்களுடைய தொடர்பு எண்கள் தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் ஏற்றப்பட்டன. பொதுமக்கள் அவர்களை எளிதில் அணுகும்பொருட்டு அவர்களுடைய அலைபேசி எண்கள் தொகுக்கப்பட்டு சிறு கையேடு வெளியிடப்பட்டது.
  • சென்னை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் `எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ (Hop On Hop Off) என்ற சுற்றுலாப் பேருந்து வசதியையும் ஏற்படுத்தினார்.
  • சென்னைக்குள் `எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் வசதி’ போக்குவரத்துத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
  • உள்நாட்டுச் சுற்றுலாவை வளர்க்கும் விதத்தில் கோடைக் கண்காட்சி, உணவுக் கண்காட்சி, வாழைக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி போன்றவை சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டன.
  • மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய நாட்டிய விழாவின் தொடக்க விழாவிற்கு `கலை இலக்கியப் பயணம்’ என்ற தலைப்பில் பாடல்கள், வசனம் ஆகியவற்றை அவரே எழுதினார். இசையமைப்பாளர் பரத்வாஜினால் அரங்கேற்றப்பட்ட இந்த பண்பாட்டுத் திருவிழா நன்கொடைகளுடன் நடத்தப்பட்டது. இவ்விழாவில் இதர மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றனர். நாட்டுப்புரக் கலைஞர்களுக்கும் இவ்விழாவில் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களையும், அதன் கலாச்சார பன்முகங்களையும் விளக்கும் வகையில் `வண்ணங்களில் தமிழகம்’ (Tamil Nadu in Colours) என்கிற காபி டேபிள் புத்தகம் கொண்டுவரப்பட்டது. இதில் பல்வேறு முன்னணிக் கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் புரிந்துகொள்வதற்காக ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பானிய, ஜெர்மானிய மொழிகளில் குறிப்புகள் கொடுக்கப்பட்டன.
  • சுற்றுலா கீதம் ஒன்று எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. இன்றும் அது சுற்றுலாத் துறையின் அழைப்பு இசையாக (உயடடநச வரநே) இருக்கிறது.
  • மாநிலத்திலேயே முதன்முறையாக பாராகிளைடிங், பாராசேய்லிங், நீர் விளையாட்டுகள், மலையேற்றம் போன்ற வீரசாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஏலகிரி, வால்பாறை, கொல்லிமலை, குற்றலாம் போன்ற வட இந்திய மக்களிடையே அதிகம் பிரபலமாகாத சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இவருடைய பதவிக் காலத்தில் எட்டு தேசிய விருதுகளும், ஒரு பன்னாட்டு விருதும், ஒன்பது தனியார் விருதுகளும் பெறப்பட்டன.
  • தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதி பெறப்பட்டது. இதன் மூலம் கூடியமட்டும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் மேம்படுத்தப்பட்டன.
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டன. இதன் காரணமாக அறைகளில் தங்குபவர்களின் அளவு 70 சதவிகிதத்தைத் தொட்டது.
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.
  • தமிழ்நாட்டு சுற்றுலாத்தலங்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணரும் வகையில் வண்ணமயமான நாட்காட்டி ஒன்று தயாரிக்கப்பட்டது. அரசின் நிதியை உபயோகிக்காமல் முழுக்க முழுக்க தனியார் ஆதரவுடன் இந்த நாட்காட்டி கொண்டுவரப்பட்டது.
  • மருத்துவச் சுற்றுலா பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டது.
  • மாநிலத்திலேயே முதன்முறையாக சுற்றுச்சூழல் கொள்கை வெளியிடப்பட்டது.
  • மத்திய அரசின் நிதியுதவியைக் கொண்டு ஏலகிரியிலும், திருப்பரங்குன்றத்திலும் சுற்றுச்சூழல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
  • மதுரை-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி மெகா சர்க்யூட்டை மேம்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.36 கோடி அளவிலான நிதி பெறப்பட்டது. இது தமிழ்நாடு பெற்ற முதல் பெருஞ்சுற்று நிதியுதவி.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சாலைகள் போடப்பட்டு அப்பகுதிகளில் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டது. முதியோர்களுக்காக பேட்டரியினால் இயங்கும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
  • சாலைகளை முன்னுரிமைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத் துறை ரூ. 35 கோடி நிதியினை சுற்றுலாத் துறைக்கு அளித்தது. திருவண்ணாமலையின் கிரிவலம் சாலைகள், திருவாரூர் தியாகேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள், கொல்லிமலைக்கு மாற்றுச்சாலை ஆகியவற்றிற்கு இந்நிதி உபயோகிக்கப்பட்டது.
  • அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டு அழகிய முகப்பு கட்டப்பட்டது. இங்கு வண்ணத்துப்பூச்சிப் பூங்கா ஒன்றினை உருவாக்கவும் நிதி ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.500 கோடி நிதியுதவி பெறப்பட்டது.
  • முதன்முறையாக அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வழிகாட்டியாகச் செயல்படுவதற்கான உரிமமும் வழங்கப்பட்டது.
  • குற்றங்களைத் தடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக ஐந்து முக்கிய நகரங்களில் `சுற்றுலாக் காவலர்’ (Tourism Police) என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மாமல்லபுரத்தில் சிற்பப்பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டது.
  • மாமல்லபுர மரகதப் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டது. அங்கு பூங்கா என்பது இது ஒன்றே.
  • இந்தியாவில் பிற நகரங்களிலும், வெளிநாடுகளிலும் விளம்பர முகாம்கள் நடத்தப்பட்டன.
  • தமிழ்நாட்டின் பெருமையை நாடு முழுவதும் உயர்த்திக் காட்ட சுற்றுலாச் செய்தி மடல் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளை அடிக்கடி உபயோகப்படுத்துபவர்களுக்காக தங்க மற்றும் பிளாட்டின அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
  • படகுக்குழாம்கள் மேம்படுத்தப்பட்டன. இளைஞர்களுக்கு சிலிர்ப்பூட்டும் உணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வாட்டர் ஸ்கூட்டர், பனானா போட், ஸ்பீட் போட் போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. படகுக்குழாம் அமைந்துள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.
  • நகர்ப்புர மக்கள் கிராமப் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் கிராமியச் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நாட்டுப்புரக் கலைஞர்கள் நல வாரியத்தில் அதிக அளவிலான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நாட்டுப்புரக் கலைஞர்கள் ஆதரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இசைக்கருவிகள், பட்டா முதலியவை வழங்கப்பட்டன. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கலாச்சாரத் திருவிழாக்களும் நடத்தப்பட்டன.
  • சுற்றுலா அடிப்படை வசதிகளை பலப்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புர நிர்வாகத் துறைகளிடமிருந்து நிதி பெறப்பட்டது. 
  • பண்பாட்டுத் துறையிலுள்ள ஆறு மண்டலங்களுக்கு சொந்த வளாகம் கட்ட நிதி ஒதுக்கி அங்கு இப்போது மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
  • இவருடைய தலைமையின்கீழ் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் காரணமாக அங்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகள்  உருவாகின. சாலைகளும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. அந்த விழாவிற்குப் பிறகு பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் தீட்டிய சோழர் வரலாறு பற்றிய 100 சித்திரங்கள் அங்கு நடந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது.
  • பாரம்பரியக் கட்டடங்கள் என்ற திட்டத்தின்கீழ் சென்னையிலுள்ள கவின் கலைக் கல்லூரி ரூ.1.8 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. கும்பகோணத்திலுள்ள கவின் கலைக் கல்லூரியில் கலைக்கூடம் அமைப்பதற்காக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது.

செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை:

  • அரசின் அனுமதி பெற்று வனக் காவலர்கள், ரேஞ்சர்கள், ஃபாரெஸ்டர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
  • இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 800 ரேஞ்சர்களின் பணி முறைப்படுத்தப்பட்டது.
  • இவரின் முயற்சியால் இந்திய வனப் பணி அலுவலர்களுக்கான உணவுவிடுதியினை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
  • சந்தனம் மற்றும் சிவப்பு சாண்டர் மரங்களை ஏலம் விடுவதில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அரசின் வருமானம் கணிசமாக அதிகரிக்கப்பட்டது.

முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை:

  • உதவிச் செயலர் மற்றும் பிரிவு அலுவலர்களுக்கான மாவட்டப் பயிற்சிக்கு ஆலோசனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அலுவலக வாகனங்கள் கொடுக்கப்பட்டதின் மூலம் ஆய்வுப் பிரிவு பலப்படுத்தப்பட்டது.
  • அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதேபோல், A&B பயிற்சி நிறுவனமும் புதுப்பிக்கப்பட்டது.
  • பல்வேறு துறைகளிலிருக்கும் திறமை வாய்ந்தவர்களை வசீகரிப்பதற்காக அவ்வப்போது வருகைதரும் விரிவுரையாளர்களின் வெகுமானம் அதிகரிக்கப்பட்டது.
  • பயிற்சியளிக்கப்பட வேண்டிய அரசு அலுவலர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் தேங்கி இருந்ததால் காவலர் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் அளவு குறைக்கப்பட்டது. இதன் மூலம் தகுதிகாண் பருவத்திற்கு ஒப்பளிப்பு செய்யாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டது.

தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம்:

  • இப்பதவியிலிருக்கையில் பவானிசாகரிலுள்ள குடிமைப் பணிப் பயிற்சி நிலையத்தைப் புதுப்பிப்பதற்காக அரசிடமிருந்து 36.23 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது.
  • பசுமைவழிச் சாலையில் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் 10.56 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டது. குடிமைப் பணிக்குத் தேர்வு பெறும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்பட்டன. நபர் ஒன்றுக்கு 700 ரூபாய் என்றிருந்த உணவுச் செலவு 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இறுதித் தேர்வினை (main exam) எழுதும் மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டது.
  • சேலம், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் பிராந்தியப் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டன. இம்மையங்கள் அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் தரத்தை வெகுவாக உயர்த்தின.
  • தேவையில்லா வழக்குகளைக் குறைப்பதற்காக வழக்காடு நிர்வாகம் (Litigation Management) போன்ற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
  • முதன்முறையாக இந்திய வர்த்தகப் பணி (Indian Trade Service), இந்திய சுங்கம் மற்றும் கலால் துறை அலுவலர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

முதன்மைச் செயலர்/ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை:

  • இவர் பணிக் காலத்தில் முதன்முறையாக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையானது தகவல்களைக் கொடுக்கும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து தகவல்களைப் பகுத்தாயும் நிறுவனமாக உருமாற்றம் பெற்றது.
  • காகித வடிவத்திலிருந்த தகவல் சேகரிப்புகள் மின்னணு இலக்க முறைக்கு மாற்றப்பட்டன.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊழியர்களின் இட மாறுதல்களுக்கு `ஆலோசனை முறை’ (counselling system) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மாநில திட்டக் குழு மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக தூய்மைக் குறியீட்டு கணக்கெடுப்பு (Cleanliness Index Survey) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கிராமப்புரங்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • புதிய குழு ஆய்வுகள் (தமிழ்நாடு குடியிருப்பு குழு ஆய்வு மற்றும் முதியோர் மக்கட்தொகை ஆய்வு) முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
  • துறையில் முதன்முறையாக தகவல் பகுப்பாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டது.
  • மாநிலம் முழுவதிலுமுள்ள அலுவலர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களைத் தீட்டுவதற்காக துறையின் பயிற்சிப் பிரிவு வலுவாக்கப்பட்டது.
  • ஒவ்வொரு வருடமும் தேசியப் புள்ளியியல் நாள் கொண்டாடப்பட்டது.
  • மாநிலத்தின் புள்ளியியல் அமைப்பினை மேம்படுத்துவதற்காக களப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • பயிர் வெட்டும் சோதனைகள் (crop cutting experiments) தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடப்பட்டன.

முதன்மைச் செயலர்/இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்:

  • தமிழ்நாட்டின் புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வரையறுப்பதில் பங்காற்றியதுடன் அர சு அதை ஏற்றுக்கொள்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்த ஆயத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுப் பயிற்சியை அறிமுகப்படுத்தினார்.
  • தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நிதி நிலையை கணிசமாக உயர்த்தினார்.
  • இரண்டு புத்தாக்க உலாக்களை நடாத்தி அவற்றின் மூலம் ஏற்கெனவே தொழிலில் இருப்பவர்களிடம் புதிதாகத் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள வழிவகுத்தார்.
  • உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜில் இருக்கும் வாசனைத் திரவிய வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் எட்டு முன்னணி விவசாயிகளுக்கு நறுமணப் பயிர்களின் மூலம் தொழில்முனைவோராக மாற பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை அலுவலர்களுக்கும் பயிற்சி தரப்பட்டது.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் கொத்து அமைந்த இடங்களுக்கான பிரச்சினைகள் குறித்த இரண்டு ஆய்வறிக்கைகள், தமிழகத்தில் பெண் தொழில்முனைவோர் பற்றிய ஆராய்ச்சி அறிக்கை ஆகியவை இறுதிசெய்யப்பட்டன.
  • தொழில் பொறிப்பக மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசின் கூடுதல் தலைமைச் செயலர்/இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர்

  • மார்ச் 01, 2019 முதல் இத்துறையில் பணி புரிகிறார்.

பெற்ற விருதுகள்

  • சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது (1998)
  • கொடி நாள் வசூலிற்கான விருது (1998 மற்றும் 1999)
  • ‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது (1996)
  • ‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது (1998)
  • சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் - 1998 மற்றும் 2003)
  • ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது (2012)
  • அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது (2005)
  • வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது (2011)
  • இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.

தனிநபர் பங்களிப்பு

  • இவர் தென்னாற்காடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார். சுனாமியால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தையே சீரமைத்தார். அந்த ஃபோரம் 4.5 கோடி ரூபாய் செலவில் அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது. சுனாமியின் பாதிப்பிற்குப் பிறகு பெரிய வீடுகள் மீனவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இந்தக் கிராமத்திற்குத்தான். இவரது முயற்சியால்தான்.
  • இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார்.
  • தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
  • இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.
  • இவர் நிறைய புத்தகங்களை பள்ளிகளுக்கும், கிராமப்புர நூலகங்களுக்கும் வழங்கியுள்ளார்.
  • குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1995-க்குப் பிற்பாடு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு இப்புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது.
  • பொதிகை தொலைக்காட்சியில் `கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர்.
  • இவர் இதுவரை 102 புத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார்.
  • குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றவர்கள்.  
  • ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
  • பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
  • அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
  • இவர் தனது புத்தகங்களின் மூலக் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்கு கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார்.
  • தினத்தந்தி வழங்கிய 2017-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

  1. இலக்கியத்தில் மேலாண்மை
  2. ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
  3. படிப்பது சுகமே
  4. சிற்பங்களைச் சிதைக்கலாமா
  5. பணிப் பண்பாடு
  6. ஆத்தங்கரை ஓரம்
  7. சாகாவரம்
  8. வாய்க்கால் மீன்கள்
  9. நரிப்பல்
  10. Steps to Super Student
  11. சிம்மாசன சீக்ரட்
  12. துரோகச் சுவடுகள்
  13. ஏழாவது அறிவு பாகம்-1
  14. ஏழாவது அறிவு பாகம்-2
  15. ஏழாவது அறிவு பாகம்-3
  16. அரிதாரம்
  17. ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
  18. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
  19. அழகோ அழகு
  20. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
  21. உள்ளொளிப் பயணம்
  22. ஓடும் நதியின் ஓசை பாகம்-1
  23. ஓடும் நதியின் ஓசை பாகம்-2
  24. மென்காற்றில் விளை சுகமே
  25. முகத்தில் தெளித்த சாரல்
  26. முடிவு எடுத்தல்
  27. நேரம்
  28. காகிதம்
  29. வனநாயகம்
  30. வரலாறு உணர்த்தும் அறம்
  31. ஆர்வம்
  32. ஆணவம்
  33. மருந்து
  34. மழை
  35. திருவிழாக்கள்
  36. இணையற்ற இந்திய இளைஞர்களே
  37. ரயில் பயணம்
  38. விவாதம்
  39. பொறுமை
  40. எது ஆன்மிகம்
  41. வைகை மீன்கள்
  42. பூனாத்தி
  43. வேடிக்கை மனிதர்கள்
  44. முதல் தலைமுறை
  45. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
  46. வாழ்க்கையே ஒரு வழிபாடு
  47. சறுக்கு மரம்
  48. உழைப்பால் உயர்வோம்
  49. சின்னச் சின்ன மின்னல்கள்
  50. திருப்பாவைத் திறன்
  51. திருவெம்பாவை
  52. அன்புள்ள மாணவனே
  53. உச்சியிலிருந்து தொடங்கு
  54. தர்மம்
  55. இயற்கை
  56. மலர்கள்
  57. முதிர்ச்சி
  58. நட்பு
  59. தரிசனம்
  60. சந்தித்ததும் சிந்தித்ததும்
  61. Ancient Yet Modern – Management Concepts in Thirukkural
  62. சுய மரியாதை
  63. இல்லறம் இனிக்க
  64. எது சரியான கல்வி
  65. அச்சம் தவிர்
  66. அவ்வுலகம்
  67. நின்னிலும் நல்லன்
  68. போர்த்தொழில் பழகு
  69. பத்தாயிரம் மைல் பயணம்
  70. வையத் தலைமைகொள்
  71. சிதறு தேங்காய்
  72. வியர்வைக்கு வெகுமதி
  73. மேலே உயரே உச்சியிலே
  74. மனிதன் மாறிவிட்டான்
  75. உன்னோடு ஒரு நிமிஷம்
  76. எப்போதும் இன்புற்றிருக்க
  77. உலகை உலுக்கிய வாசகங்கள்
  78. கேள்வியும் நானே பதிலும் நானே
  79. செய்தி தரும் சேதி
  80. Comparing Titans – Thiruvalluvar and Shakespeare
  81. Random Thoughts
  82. Effective Communication : The Kambar Way
  83. கல்லூரி வாழ்க்கை
  84. நினைவுகள்
  85. பிரிவு
  86. சேமிப்பு
  87. சிக்கனம்
  88. சுத்தம்
  89. தாமதம்
  90. தவம்
  91. தூக்கம்
  92. உடல்
  93. காதல்
  94. கருணை
  95. தனிமை
  96. வாழ்க்கை
  97. வைராக்கியம்
  98. அழகு
  99. நம்பிக்கை
  100. மூளைக்குள் சுற்றுலா
  101. காற்றில் கரையாத நினைவுகள்
  102. நமது அடையாளங்களும் பெருமைகளும்

அடிக்குறிப்புகள்

The contents of this page are sourced from Wikipedia article on 17 Sep 2019. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Irai Anbu is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Reference sources
References
Irai Anbu
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes