Va. Gopalaswamy Raghunatha Rajaliyar
Quick Facts
Biography
வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் (நவம்பர் 17, 1870 - சூன் 6, 1920) தமிழகத்தில் வாழ்ந்த வாழ்ந்த புரவலரும், தமிழறிஞரும், புலவரும் ஆவார். கரந்தை வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் தொடங்கப்பட்ட வித்தியா நிகேதனம் தமிழ் சங்கத்திற்கு தலைவராக இருந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு தனது முழு ஆதரவை அளித்து, சங்கத்தின் ஆண்டுவிழாவை தஞ்சையில் நடத்திவைத்தவரில் ஒருவர்.
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் 1912 இல் தில்லி வந்தபோது அவரது முடிசூட்டு நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தனர்களில் இராசாளியாரும் ஒருவர். இராசாளியார் வீட்டில் மிகவும் பழமையான புறநானூற்று ஏடு ஒன்று இருந்ததை, கிருஷ்ணசாமி சேனைநாட்டார் படியெடுத்து வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர், திருச்சி பகுதி கள்ளர்களை குற்றப் பரம்பரையில் இருந்து மீட்டார்.
வாழ்க்கைச் சுருக்கம்
கோபாலசாமி இரகுநாதர் தஞ்சாவூர் மாவட்டத்தில், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் 1870 நவம்பர் 17 ஆம் நாள் வாசுதேவ இரகுநாத இராசாளியார், ஆயி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது மனைவி பெரியநாயகி அம்மையார் ஆவார்.
சமூகப் பணிகள்
அரித்துவாரமங்கலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றையும் நூலகம் ஒன்றையும் நிறுவினார். திருவாவடுதுறை ஆதீன முதல்வர் குரு மகாசந்திதானம் இந்நூலகத்துக்கு சரசுவதி மகால் என பெயர் சூட்டினார். வீரசோழியம் எனும் இலக்கியத்தின் மூலச் சுவடிகள் இந்த நூலகத்தில் இருந்தே பெறப்பட்டன. இந்த நூலகத்தில் இருந்தே உ. வே. சாமிநாதையர் புறநானூறு பதிப்பித்த போது அவரிடம் இல்லாத பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.
அரசன் சண்முகனார், உ. வே. சாமிநாதய்யர், அருணாசலக் கவிராயர், ந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற பல தமிழறிஞர்களை ஆதரித்து வந்தார். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து அதற்கு முழு ஆதரவு அளித்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக தமிழ்த்துறை தோன்றுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார்.
முதன்முதலில் தொல்காப்பியருக்கு நீலகிரி, குன்னூரில் சிலை ஒன்றை நிறுவி 1911 செப்டம்பர் 10 இல் திறந்து வைத்தார். குன்னூரில் நூலகம் ஒன்றை நிறுவினார்.
அன்னி பெசண்ட் அம்மையார் இவரது சமூக சேவையை பாராட்டி F.T.S ( Fellowship thiophical society) என்ற விருதை வழங்கினார்.