peoplepill id: v-anaimuthu
VA
India
8 views today
9 views this week
V. Anaimuthu
Indian politician

V. Anaimuthu

The basics

Quick Facts

Intro
Indian politician
Places
Work field
Gender
Male
Place of birth
Perambalur district, Tamil Nadu, India
Age
95 years
Education
Annamalai University
Chidambaram, Cuddalore district, India
The details (from wikipedia)

Biography

வே. ஆனைமுத்து (21 சூன் 1925 - 6 ஏப்ரல் 2021) பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.

பிறப்பும் கல்வியும்

இன்றைய பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக21 சூன் 1925 அன்று பிறந்தார் ஆனைமுத்து.

1940 இல் கடலூர் மாவட்டம் வீரானந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ந. கணபதியின் வழிகாட்டுதலால் பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றார்.

இன்றைய நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது "தமிழ் மறவர்" வை. பொன்னம்பலனார் தொடர்பால் தனித்தமிழ், பெரியாரிய கொள்கைகளில் தெளிவு பெற்றார். அங்கு 11 அக்டோபர்1944 அன்று பெரியாரின் சொற்பொழிவை நேரில் கேட்டார்.

1946 முதல் 1949 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அங்கு நூலகத்தில் இருந்த தமிழ், ஆங்கில நூல்களைக் கற்று தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார். திராவிடநாடு, பல்லவநாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் கட்டுரையும் பாடல்களும் எழுதினார்

செயல்பாடுகள்

இதழியல், அரசுப்பணி, போராட்டம்

பெரியார் 14 சனவரி 1949 அன்று சென்னையில் நடத்திய திருக்குறள் மாநாட்டைத் தொடர்ந்து 1950-இல் திருக்குறள் வீ. முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு ஆசிரியர் கணபதியும் ஆனைமுத்துவும் (துணை ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்) சேர்ந்து குறள்மலர் என்னும் கிழமை இதழைத் திருச்சியில் தொடங்கினார். 25 கிழமைகளில் அவ்விதழில் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பின்னர், முனிசாமியுடன் ஏற்பட்ட பிணக்கால் அதில் இருந்து வெளியேறினார்.

1952-இல் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணிக்கு சேர்ந்தார். 1956-இல் அரசுப் பணியைத் துறந்து திருச்சிராப்பள்ளியில் குடியேறினார்.

11 சனவரி 1957 அன்று குறள் முரசு என்ற ஏட்டைத் தொடங்கினார். அதில் அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அவை பெரியாரால் போற்றப்பட்டு, குடிஅரசு இதழிலும் வெளியிடப்பட்டன.

26 நவம்பர் 1957 அன்று இந்திய அரசியலமைப்பு நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக 18 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

திராவிடர் கழகம் (1960-75)

1960-இல் மீண்டும் திருச்சியில் குடியேறி திராவிடர் கழகத்தின் (தி.க.) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். பொருளாதார தேவைக்காக 1963 முதல் 1975 வரை தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரியை நடத்தினார். மாநிலம் முழுவதும் இயக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு வழிசெய்தார்.

பொறியாளர் கு. ம. சுப்பிரமணியம், நோபுள் கோவிந்தராசலு போன்றோர் துணையுடன் 7 மார்ச் 1970 அன்று திருச்சியில் 'சிந்தனையாளர் கழகத்தை'த் தொடங்கினார். துவக்க விழாவில் பெரியார் கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

1971 முதல் 1974 வரை உழைத்து பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற மூன்று தொகுதிகளை தொகுத்து சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் நூலாக்கினார். அந்த தொகுப்பு நூல்களை 1 சூலை 1974 அன்று அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. கருணாநிதி வெளியிட்டார்.

17 ஆகத்து 1973 அன்று திருச்சியில் பாவேந்தர் அச்சகத்தைத் தொடங்கினார். மறு ஆண்டு அதே நாள் தொடங்கி சிந்தனையாளன் என்ற திங்களிதழைத் தன் சொந்த பொறுப்பில் வெளியிட்டார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகான தி.க.வின் போக்குகளை விமர்சித்து மத்தியக்குழு உறுப்பினர்களுக்கு அச்சிட்ட அறிக்கைகளை அனுப்பியமைக்காக 16 நவம்பர் 1975 அன்று தி.க மத்தியக் குழுவில் இருந்தும், தி.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.

பெரியார் சம உரிமைக் கழகம் (1976-88)

இன்றைய மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 8 ஆகத்து 1976 அன்று சேலம் அ. சித்தையன், சீர்காழி மா. முத்துச்சாமி, ஆ.செ. தங்கவேலு, ந. கணபதி, தக்கோலம், கா.ந.ஜலநாதன் ஆகிய தோழர்களின் துணையுடன் பெரியார் சம உரிமைக் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார்.

1978-இல் ஒன்றிய அரசுக் கல்வியிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடம் நேரில் கோரிக்கை வைத்தார். மேலும் உத்தரப் பிரதேச (உ.பி.) மாநிலம் முசாபர்நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அதன் விளைவாக பீகார் மாநிலத்தில் முதன் முறையாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1979-இல் தில்லியில் பெரியார் நூற்றாண்டு விழாவை அன்றைய இந்தியத் துணைத் தலைமையமைச்சர் ஜெகஜீவன்ராமை வைத்துத் தொடங்கி வைத்தார். அக் காலத்தில் ஆனைமுத்துவால் தொகுக்கப்பட்ட "தந்தைப் பெரியாரின் இடஒதுக்கீடு" கருத்துக்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பில் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தார். இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளைப்அசாம், பீகார், கேரளம், கருநாடகம், இராசத்தான், உ. பி., மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடத்தினார். தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு 31 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தக்கோரி அன்றைய முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தார். இதன் வழியே பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1980-இல் சிந்தனையாளனில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுப் பல நூல்களாக வெளிவந்தன. தலித்தியச் செயல்பாட்டாளர் கன்சிராம் நடத்திய அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (BAMCEF) கூட்டங்களில் தலைமையேற்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டார்.

1982-இல் ஆனைமுத்துவின் பல போராட்டங்களைத் தொடர்ந்து அன்றைய உள்துறை அமைச்சர் அவரைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து மண்டல் ஆணைக்குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி (1988-2021)

பெரியார் சம உரிமைக் கழகம், 13 மார்ச் 1988 அன்று மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றப்பட்டது.

1991-இல் தில்லியில் பெரியார் பிறந்தநாள் விழாக்களையும், பிற வடமாநிலங்களில் பெரியார் கொள்கைப் பரப்புரைகளையும் முன்னெடுத்தார்.

1994-இல் ஈழச் செயல்பாட்டாளர் எஸ். ஏ. டேவிட் துணையுடன் "பெரியார் ஈரா" (Periyar Era) என்ற ஆங்கிலத் திங்களிதழைத் தொடங்கினார்.

1996- திருக்குறள் மாநாட்டை நடத்தினார். பெரியார் பற்றிய சொற்பொழிவு மற்றும் ஆய்வுக்காக மலேசியா சென்றார். வட இந்தியாவின் 30 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டைஆதரித்துப் பரப்புரை செய்தார்.

2005-இல் மீண்டும் மலேசியாவுக்கும் அதன்பின் சிங்கப்பூர், மற்றும் இலங்கைக்கும் பயணம் செய்தார்.

படைப்புகள்

  1. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள் - தொகுப்பாசிரியர்
  2. சிந்தனையாளர்களுக்குச் சீரிய விருந்து
  3. தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்
  4. பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?
  5. விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  6. பெரியாரியல் - இரண்டு தொகுதிகள்
  7. தத்துவ விவேசினி (தொகுப்பு)
பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி நூலை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்தார். மேலும் தகவலுக்கு

தனி வாழ்க்கை

22 ஆகத்து, 1954 அன்றுபொன்னம்பலனார் தலைமையில் கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசிலாவைத் திருமணம்செய்திருந்தார் ஆனைமுத்து. இவர்களுக்கு தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் என ஏழு பிள்ளைகள் உள்ளனர்.

மறைவு

புதுச்சேரியில் 6 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பால் தமது 96-ஆம் அகவையில் மறைந்தார் ஆனைமுத்து. மறைவிற்கு முன்னர் கோவிட்-19 தொற்றால் சென்னை அரசு மருத்துவமனையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவக் கொடையாக சென்னை போரூரில் உள்ள சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு 7 ஏப்ரல் அன்று மாலை 5:30 மணிக்கு அளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
V. Anaimuthu is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
V. Anaimuthu
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes