S. Ramdas
Quick Facts
Biography
எஸ். ராமதாஸ் (இறப்பு: சூலை 13, 2016) இலங்கையின் புகழ் பெற்ற வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். நகைச்சுவைப் பாத்திரங்களிலும், குணச்சித்திரப் பாத்திரங்களிலும் பிரகாசித்த சிறந்த நடிகர். "மரிக்கார்" ராமதாஸ் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டவர்.
வெள்ளிவிழாக் கலைஞர்
கலைவாழ்வில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த வகையில் 1990இல் தனது கலையுலக சகாக்களான ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் ஒரே மேடையில் வெள்ளிவிழா கொண்டாடியவர்.
வானொலியில்
இலங்கை வானொலியில் வர்த்தகசேவையில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதி, நடித்ததோடு தயாரித்தும் வழங்கியவர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய "கோமாளிகள் கும்மாளம்" என்ற பிரபலமான நாடகத்தொடரை இவரே எழுதியதோடு, 'மரிக்கார்'பாத்திரத்திலும் நடித்து அதையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவர். இதுவே பின்னர் 'கோமாளிகள்' என்ற பெயரில் திரைப்படமாகியது. கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய வானொலித் தொடர்நாடகமான 'கிராமத்துக்கனவுகள்' நாடகத்தில் யாழ்ப்பாண கிராமத்தில் வாழ்ந்த ஒரு இந்திய ஆசிரியராக குணசித்திர பாத்திரத்தில் நடித்து உருக வைத்தவர்.
தொலைக்காட்சியில்
'மலையோரம் வீசும் காற்று', 'எதிர்பாராதது', 'காணிக்கை' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததோடு எழுதித் தயாரித்தும் இருக்கிறார்.
நடித்த திரைப்படங்கள்
- குத்துவிளக்கு (திரைப்படம்)
- கோமாளிகள்
- ஏமாளிகள்
- புதிய காற்று
- மாமியார் வீடு
- நான் உங்கள் தோழன்
- நாடு போற்ற வாழ்க
- Blendings - ஆங்கிலப்படம்
- நொமியன மினிசு - சிங்களப் படம்
- ஷார்மிளாவின் இதய ராகம்
நடித்த மேடை நாடகங்கள்
- புரோக்கர் கந்தையா
- சுமதி
- காதல் ஜாக்கிரதை
- கலாட்டா காதல்
மறைவு
மரிக்கார் எஸ்.ராம்தாஸ் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் 2016 சூலை 13 அதிகாலை தனது 69வது அகவையில் சென்னையில் காலமானார்.