Malligai C. Kumar
Quick Facts
Biography
மல்லிகை சி. குமார் (சனவரி 4, 1944 - சனவரி 27, 2020) இலங்கை மலையகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், கவிஞரும், ஓவியரும் ஆவார். தொழிலாளர் அடக்குமுறைக்கெதிராகப் பல சிறுகதைகளையும் கவிதைகளையும் படைத்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சி. குமார் தலவாக்கலை பெரியமல்லிகைப்பூ தோட்டத்தில் 1944 ஆம் ஆண்டில் சின்னையா - கதிராய் ஆகியோருக்குப் பிறந்தார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். தான் பிறந்த தோட்டத்தின் நினைவாக மல்லிகை சி. குமார் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். தலவாக்கலையில் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றினார். அட்டன் கிறித்தவத் தொழிலாளர் சகோதரத்துவத்தின் நிறுவனர் ஜெப்ரி அபயசேகர என்பவரூடாக இவர் வெளியுலகிற்கு அறிமுகமானார். 1970கள் அந்த நிறுவனத்திற்கு பல ஓவியங்களை வரைந்து கொடுத்தார். கால்நடை வளர்ப்பு தொடர்பான பல கட்டுரைகள் எழுதினார்.
மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்கள் விழிப்பு என்ற பெயரில் ஜெப்ரி அபயசேகரா வெளியிட்டார். அத்தொகுப்பில் இவரது சிறுகதை ஒன்று இடம்பெற்றிருந்தது. இத்தொகுதி பின்னர் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவரது கவிதைத் தொகுப்பு ஒன்றை மாடும் வீடும் என்ற தலைப்பில் அந்தனி ஜீவா வெளியிட்டார். இத்தொகுப்புக்கு கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை வழங்கியிருந்தார். இவர் பல கவியரங்குகளில் கலந்து சிறப்பித்திருந்தார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினகரன் உட்படப் பல இலங்கைப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளிவந்திருந்தன.
வெளிவந்த நூல்கள்
- வேடத்தனம் (2020)
- மாடும் வீடும் (கவிதைகள், கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம், 1995)
- மனுஷியம் (சிறுகதைகள், சாரல் வெளியீட்டகம், 2001)
விருதுகள்
- முன்னாள் இராசாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் இவருக்கு தமிழ்மணி விருது வழங்கிக் கௌரவித்தார்.
- கலைமாமணி விருது (2019)
- கலாபூசணம் விருது
மறைவு
சில மாதங்களாகச் சுகவீனமுற்றிருந்த நிலையில் மல்லிகை சி. குமார் தனது 76-வது அகவையில் 2020 சனவரி 27 இல் காலமானார். இவருக்கு சுகுணா (ஊடகவியலாளர் /வீரகேசரி நாளிதழ் சிரேஷ்ட உதவி ஆசிரியர் /சங்கமம் பொறுப்பு/ தினதந்தி கொழும்பு வெளியீட்டின் ஒருங்கிணைப்பாளர்) என்ற மகளும் மாறன் என்ற மகனும் இருக்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- மல்லிகை சி. குமாரின் முகநூல்
- சின்னையா குமார் வாய்மொழி வரலாறு, லுணுகலை ஸ்ரீ, நூலகத் திட்டம், 6 திசம்பர் 2018