L. Murugabhupathi
Quick Facts
Biography
லெட்சுமணன் முருகபூபதி (Letchumanan Murugapoopathy, பிறப்பு: சூலை 13, 1951) இலங்கைப் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் ஆவார். 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார். இவருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகாவித்தியாலத்திலும் கல்வி கற்றார்.
1977ல் வீரகேசரி பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவுஸ்திரேலியாவில் 1988 முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியனவற்றின் ஸ்தாபக உறுப்பினருமாவார்.
1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர் 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டார்.
முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும் வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இலங்கையில் மல்லிகை, ஞானம் முதலான இலக்கிய இதழ்களில் அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டார்.
எழுதிய நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
- சுமையின் பங்காளிகள் (1975, 2007), இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது (1976)
- சமாந்தரங்கள் (1989)
- வெளிச்சம் (1998)
- எங்கள் தேசம் (2000)
- கங்கை மகள் (2005)
- நினைவுக்கோலங்கள் (2006)
- மதக செவனெலி (Shadows Of Memories) - மொழிபெயர்ப்பு (2012)
- கதைத் தொகுப்பின் கதை (2021)
புதின நூல்கள்
- பறவைகள் (2001)
சிறுவர் இலக்கியம்
- பாட்டி சொன்ன கதைகள் (1997)
பயண இலக்கியம்:
- சமதர்மப்பூங்காவில் (1990)
கடித இலக்கியம்
- கடிதங்கள் (2001)
நேர்காணல்
- சந்திப்பு (1998, இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் சந்தித்த ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய நூல்)
கட்டுரை நூல்கள்:
- நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995, தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள்
- இலக்கிய மடல் (2000)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (2001)
- எம்மவர் (2003, அவுத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு)
- கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004)
- ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள் (2005)
- உள்ளும் புறமும் (2011, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும்)
- சொல்ல மறந்த கதைகள் (2014)
- சொல்ல வேண்டிய கதைகள் (2017)
- சொல்லத்தவறிய கதைகள் (2019)
- இலங்கையில் பாரதி - ஆய்வு நூல் (2019)
- நடந்தாய் வாழி களனி கங்கை (2021)
- யாதுமாகி (2022)
- வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (2022)
- பாரதி தரிசனம் (2022)
பெற்ற விருதுகள்
- சுமையின் பங்காளிகள் - 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
- பறவைகள் - 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
- 2002 அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது
- பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது (2012, ஆத்திரேலியா)
- அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
மேலும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளின் பாராட்டு விருதுகளும் பெற்றவர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- முருகபூபதி, லெ.
- லண்டன் மகரந்தச்சிதறல் நேர்காணல்
- லெ.முருகபூபதியுடன் நேர்காணல், ஐபிசி தமிழ்
- இலக்கியப்பணி, அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது - எழுத்தாளர் முருகபூபதியுடன் நேர்காணல்:
- முருகபூபதியுடன் கவிஞர் மேமன்கவி உரையாடும் காணொளி நிகழ்ச்சி
- ஊடகவியலாளர் முருகபூபதியுடன் கருத்தாடல் அரங்கம், Sydney Focus Thamil