K. Nedunchezhiyan
Quick Facts
Biography
க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15 சூன் 1944 – 4 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், மெய்யியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுத்தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி“இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” உள்ளிட்ட 25 நூல்களை எழுதினார். இவற்றுள் ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற ஆய்வு நூல் கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது. இவர் ஆய்வுகள் மொழியியல் ஆய்வாளர்கள் நடுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழரின் பழங்கால சமயமும், ஏறக்குறைய தமிழர்களால் மறக்கடிக்கப்பட்டதுமான ஆசீவகம் குறித்து ஆராய்ந்து எழுதி அந்நெறி குறித்த கருத்துகளை மீண்டும் பொதுவெளியில் கொண்டுவந்தார்.
மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஆய்வாளராக, அறிஞராக நெடுஞ்செழியன் பார்க்கப்படுகிறார்.
தொடக்க வாழ்க்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அன்பில் படுகை எனும் சிற்றூரில் வேளாண்மைத் தொழில் செய்துவந்த மீனாட்சி-கந்தசாமி இணையருக்கு 15 சூன் 1944 அன்று பிறந்தார் நெடுஞ்செழியன். இவர் பிறப்பதற்கு முன்பே இவர் குடும்பத்தினர் (குறிப்பாக இவர் தந்தையும் சிற்றப்பாவும்) திராவிட இயக்கத்துடனும் "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடனும் தொடர்பில் இருந்தனர். அந்நாட்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணிப் பேச்சாளராக இருந்த "நாவலர்" இரா. நெடுஞ்செழியனின் புகழ் கருதி அவர் பெயரை இவருக்குச் சூட்டினர். இவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உண்டு.
நெடுஞ்செழியனின் தாயார் மீனாட்சி, 20 மார்ச் 2018 அன்று திருச்சியில் காலமானார்.
கல்வி
உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்த நெடுஞ்செழியன்,உயர்கல்வியைக்கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் (முதுகலை தமிழ்; 1967-69) நிறைவு செய்தார். 1968-இல் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை அன்றைய சென்னை மாநில முதல்வராக இருந்த "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரையிடம் பெற்றார்.
மெய்க்கீர்த்திகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தபோது தன் நெறியாளரான பேராசிரியர் முருகரத்தினம் என்பாரின் ஊக்கத்தால் வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற நூலை வாசித்தார். அந்நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
ஆசிரியப்பணி
1969-ஆம் ஆண்டில் திருச்சியிலுள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தன் ஆசிரியப்பணியைத் தொடங்கினார் நெடுஞ்செழியன். அதனைத் தொடர்ந்து தான் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும் பிறகு முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியிலும் பணியாற்றினார். பின்னர்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
கல்லூரி, பல்கலைக்கழகப் பணியின்போதும் சொந்த ஊருக்குச் சென்று வேளாண்மை செய்வதைத் தன்னுடைய இணைப் பணியாக மேற்கொண்டார்.
ஆய்வுகள்
கருத்துமுதல்வாதமே இந்தியச் சிந்தனை மரபு என முன்மொழியப்பட்ட சூழலில், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் மரபை அடியொற்றிப்பொருள்முதல் வாதம் தமிழகத்தில் தோன்றிய தத்துவம் என எடுத்துரைக்க முயன்றார் நெடுஞ்செழியன். பெளத்தம் மற்றும் சமணம் போல ஆசீவகமும் வட இந்திய மதம் என்ற கருத்தை மறுத்து அதன் தமிழ் வேர்களைக் கண்டறிய முனைந்தார். இதற்கென இந்தியவியல் அறிஞர் ஏ. எல். பசாமின் ஆய்வுகளைச் சான்றாகக் கொண்டார். ஆசீவகத்தைத்தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் ஐயனார், சாத்தன் என்ற பெயர்களில் வணங்கப்படுபவர் அவர்தான் எனவும் மொழிந்தார். அவரது ஆய்வுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்ற விமர்சனத்துக்கும் ஆளாயின.
தொடர்ந்து ஆசீவகம் குறித்து உரைகளை நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் இளம் ஆய்வாளர்கள் பலரையும் திருச்சிக்கு வரவழைத்துத் திருப்பட்டூர், சித்தன்னவாசல் போன்ற இடகளுக்கு நேரில் அழைத்துச் சென்று, களப்பயணமாக அவற்றைக் கற்றுத் தந்தார்.
திருப்பட்டூரிலுள்ள அரங்கேற்ற அய்யனார் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல்குடைவரைக் கோயில் ஆகிய இடங்களில் 17 செப்டம்பர் 2017 அன்றுநடைபெற்ற வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கினார் நெடுஞ்செழியன். அப்போது அவர் "அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மீட்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்தக் கள ஆய்வு. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'கீழடி'கள் உள்ள நிலையில், அதில் முதன்மையானதாக திருப்பட்டூர் விளங்குகிறது. இங்கு அகழாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தினால், தமிழர்களின் அறிவார்ந்த பல விடயங்கள் வெளியுலகுக்குத் தெரியவரும்" என்றார்.
உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் என்ற அமைப்பைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரகுகளையும் நடத்தினார்.
குடும்ப வாழ்க்கை
சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் இந்தி எதிர்ப்புக் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட இரா. சக்குபாய் என்பாரை 11 ஏப்ரல் 1971 அன்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் நெடுஞ்செழியன். சக்குபாய் பின்னாளில் மற்றொரு தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் உருப்பெற்றார்.இவ்விணையருக்கு நகைமுத்து, குறிஞ்சி எனும் மகள்களும் பண்ணன் என்ற மகனும் பிறந்தனர்.ஈழப் போரில் இந்திய அமைதி காக்கும் படை ஈடுபட்ட காலத்தில் (1987-90) பதினெட்டு அகவை நிரம்பிய பண்ணன் வீட்டைவிட்டு வெளியேறித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததாகவும் பின்னர் ஒரு துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அரசியல் ஈடுபாடு
திராவிட இயக்கங்களிலும் தமிழ் அரசியலும் ஈடுபாடு கொண்டவர் நெடுஞ்செழியன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர் மு. கருணாநிதி, திமுகவினரிடம் திராவிட-பெரியாரியல் கருத்துகளைக் கொண்டுசேர்க்கும் நோக்கில் 'அறிவாலயம்' என்னும் அஞ்சல்வழிப் படிப்பைத் தொடங்கியபோது, அதன் பாடத்திட்ட உருவாக்கக் குழுவில்மா. நன்னன், மு.க.சுப்பிரமணியன் ஆகியோருடன் நெடுஞ்செழியனும் இடம் பெற்றிருந்தார். திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகனுடன் நெருக்கமாக இருந்த நெடுஞ்செழியன், அன்பழகனின் 80-ஆம் ஆண்டு மணிவிழாவை நடத்தி, விழா மலரையும் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அனைத்துத் தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றினார் அவர் எழுதிய பல கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழான ‘எரிமலை’யில் வெளியாகின.
வழக்குகளும் சிறையிருப்பும்
தடா வழக்கு (1994-95)
1994-95 காலகட்டத்தில் நாள்தோறும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடையே திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் குறித்துப் பேசுவதையும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன். திருச்சியில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் எனக் குற்றம் சாட்டி அவரை பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் கைது செய்தது தமிழ்நாட்டுக் காவல்துறை. அவருடன் திராவிடர் கழகத்தின் அன்றைய சேலம் மண்டல அமைப்புச் செயலாளரும் பின்னாளைய திராவிடர் விடுதலை கழகத் தலைவருமான கொளத்தூர் மணியும் சிறையில் இருந்தார். நெடுஞ்செழியன் அதன்பின் பிணை ஆணை பெற்று வெளிவந்தார்.
பிரேசர் டவுன் வழக்கு (2002-13)
2002-03 காலகட்டத்தில் காவிரி ஆற்று நீர்ப் பிணக்கை முன்வைத்து கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் பதற்றம் நிலவியது. இதையொட்டி "வெடிகுண்டு மற்றும் வெடிபொருள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் மற்றும் கருநாடகத் தமிழ்த் தீவிரவாதிகள்" என்ற ஐயத்தின் அடிப்படையில் சிலர் மீது புலிகேசி நகர் (பிரேசர் டவுன்) காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு பதியப்பட்டது (SC NO: 471/2003, Crime No: 472/2). இதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தோரில் ஒருவர் நெடுஞ்செழியனின் 1994-95 பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர் என்ற ஐயத்தின் அடிப்படையிலும் தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் ்4 சூலை 2003 அன்று காலையில் கருநாடகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் நெடுஞ்செழியன்.
" “பொய் வழக்குப் போட்டு- என்
புகழையெல்லாம் தீய்த்து
கைவிலங்கு மாட்டியெனை
கடுஞ்சிறையில் பூட்டி
வெங்கொடுமைச் செய்தாலும்
நான் வீழ்ந்துவிட மாட்டேன்
பங்கமெலாம் கண்டு
நான் பயந்து விடமாட்டேன்
வஞ்சகத்தின் முன்னே
நான் மண்டியிட மாட்டேன்............... ........... "
நெடுஞ்செழியன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ்
கைதானவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான மேல் முறையீட்டு மனு கருநாடக உயர் நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. பிணைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு காரணம் காட்டி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும்இவ் வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கப் பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்குக் கட்டுகளை அச் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. அதன்படி நீதியர் அரளி நாகராஜ்முன்பாக விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை விரைந்து நடத்தப் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், உயர் நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி “வழக்கை விரைந்து நடத்தியிருந்தால் பாதிக்கப்பட்டோர் விடுதலையாகி இருப்பார்களே’’ என்று தம் ஆதங்கத்தை வெளியிட்டார் நீதியர் நாகராஜ் . பின்னர் வேறொரு நீதியர் நியமிக்கப்பட்டார். சிறையானோரின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக கர்நாடக அரசு “பேராசிரியர் நெடுஞ்செழியன் சிறையில் பத்திரமாக உள்ளார். என்று அறிக்கை வெளியிட்டது.
""காணவும் பேசவும் காத்துக்கிடந்த காலங்கள் எத்தனை
நாணமும் வெட்கமும் பின்னிய கண்களில்
நாளும் வளர்ந்த கனவுகள் அத்தனை
ஆண்டுகள் முப்பத்து மூன்று நிறைந்தன
அன்போ சுரந்திடும் கொள்ளிட ஊற்றாம்
வேண்டிய அனைத்தும் அனைத்தும் துய்த்தனம்
விரும்பிய வாழ்க்கையை மகிழ்ந்து அமைத்தனம்
நல்ல தலைவர்கள் அன்பினைப் பெற்றோம்
நட்பின் சிறப்பினை நாளும் துய்த்தோம்
சொல்லி வருந்தக் குறையேதுமில்லை
தூயநற் பணியில் தொடர்ந்து நாம் வெல்வோம்"
நெடுஞ்செழியன், 11 ஏப்ரல் 2004 அன்று சக்குபாய்க்கு எழுதிய கவிதை
சிறையிருப்புக் காலத்தில் வழங்கப்பட்ட உணவு பற்றி நெடுஞ்செழியன் எழுதிய “எத்தனை நாளைக்கு இன்னும் எத்தனை நாளைக்கு’’ எனும் கவிதை தென்செய்திஇதழில் வெளிவந்தது. மேலும் அவர் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் வெளியிட்டது. இக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளே பின்னர் தமிழரின் அடையாளங்கள், சங்ககாலத் தமிழர் சமயம், சித்தண்ணவாயில் எனும் மூன்று நூல்களாக 2006-இல் வெளிவந்தன.
16 பிப்ரவரி 2006 அன்று பிணை பெற்று வெளிவந்தார் நெடுஞ்செழியன்.சிறையிருப்பால்அவரது சமூக, ஆய்வுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. 2008-ஆம் இவ்வழக்கு ஆண்டு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
பத்து ஆண்டுகளில் மொத்தம் பதினெட்டு நீதியர்கள் இவ்வழக்கை விசாரித்தனர். இறுதியாக வந்த நீதியர் எம்.எஸ்.பாலகிருஷ்ணா தன் தீர்ப்பை 30 மே 2013 அன்று வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதான குற்றத்திற்குப் போதிய ஆதாரம் இல்லையாகையால் அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக ஆணையிட்டார்.
தலைமறைவான இருவர் மற்றும் இறந்துவிட்ட மூவர் தவிர, நெடுஞ்செழியன் உள்ளிட்ட மற்ற 10 பேரும் விடுதலை பெற்றனர்.
படைப்புகள்
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1989 | இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் | மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி | |
1990 | தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் | ||
1996 | உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும் | ||
2000 | தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சரக சம்கிதையும் | ||
2001 | சமூக நீதி | ||
2002 | தமிழர் தருக்கவியல் | மனிதம் பதிப்பகம் | |
ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம் | |||
2004 | தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்கள்: சு. இராசவேலு மற்றும் பலர்) | தமிழ் முழக்கம் பதிப்பகம் | |
2006 | தமிழரின் அடையாளங்கள் | கட்டுரைத் தொகுப்பு | பாலம் பதிப்பகம், சென்னை |
சங்ககாலத் தமிழர் சமயம் | |||
சித்தண்ணவாயில் | பாலம் பதிப்பகம் | ||
2007 | சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் | ||
2010 | மரப்பாச்சி | கவிதைத் தொகுப்பு | |
தொல்காப்பியம்-திருக்குறள்: காலமும் கருத்தும் | |||
2012 | நாகசாமி நூலின் நாசவேலை | மனிதம் பதிப்பகம் | |
2014 | ஆசிவகமும் ஐயனார் வரலாறும் [இணையாசிரியர்: சக்குபாய்] | பாலம் பதிப்பகம் | |
2016 | பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமரன் ஆசானும் | ||
2017 | தமிழர் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும் | நெல் பதிப்பகம் | |
தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம் [இணையாசிரியர்: செங்கதிர்] | கரிகாலன் பதிப்பகம், மங்கலபுரம் | ||
பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும் | |||
? | மெய்க்கீர்த்திகள்: அமைப்பும் நோக்கும் | மனிதம் பதிப்பகம் | |
? | இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை [இணையாசிரியர்: சக்குபாய்] | மனிதம் பதிப்பகம் | |
? | தமிழர் சிந்தனை வரலாறு - தொல்காப்பியம் முதல் பெரியாரியம் வரை | ||
c.2017 | தரும சாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்? | காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் | |
c.2019 | சமணர் என்போர் சைனரா?: வினாவும் விடையும் | மனிதம் பதிப்பகம் | |
c.2021 | ஆசிவகமும் தினமணி அரசியலும் | கட்டுரைத் தொகுப்பு | மனிதம் பதிப்பகம் |
பதிப்பித்த நூல்கள்
ஆண்டு | தலைப்பு | குறிப்பு | வெளியீடு |
---|---|---|---|
1993 | இந்திய மெய்யியலில் தமிழகம் | 10 ஏப்ரல் 1991 அன்று வாசிக்கப்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
1998 | கலைஞரின் படைப்பிலக்கியத் திறனாய்வு ("A Critical Evaluation of Kalaignar's Creative Works) | (இணைப் பதிப்பாசிரியர்: முனைவர் பெ. இராமலிங்கம்) | தமிழ்ப் பல்கலைக்கழகம் |
2002 (?) | பேராசிரியர் க.அன்பழகன் பவழமாலை | க.அன்பழகன் அகவை நாள் விழா மலர் | காலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம் |
2009 | பன்முக நோக்கில் பேரறிஞர் அண்ணா | பாரதிதாசன் பல்கலைக்கழகம் (தி பிரிண்டிங் ஹவுஸ்) | |
2018 (?) | ஆசீவகம் - வேரும் விழுதும் | ||
(?) | இந்திய சமூகப்புரட்சியில் ஜோதிபா பூலே - அம்பேத்கர்- பெரியார் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
விருதுகள்
அவர் நூல்களில் ‘இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்' எனும் நூல், இந்திய அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான சரசுவதி சம்மான் விருதுக்காகவும் , ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்' எனும் நூல், பாரதிய ஞானபீடத்தின் சிறந்த ஆய்வு நூல்களுக்குரிய விருதாகிய மூர்த்திதேவி விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. ஒரே ஆசிரியரின் இரண்டு நூல்கள் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, அவருடைய ஆய்வின் தன்மைக்குக் கிடைத்த மிகச் சிறந்த சான்று. ‘சமூக நீதி' எனும் நூல், சேலம் அறக்கட்டளைப் பரிசையும் ‘உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்' எனும் நூல், தமிழக அரசின் முதல் பரிசையும் பெற்றவை.
இவர் எழுதிய “தமிழரின் அடையாளங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.“சித்தண்ணவாயில்’’ கட்டுரைத் தொகுப்புக்கு 2009-இல் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டது.
2 மே 2015 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் நெடுஞ்செழியனுக்கு "அயோத்திதாசர் ஆதவன் விருது" வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் பொற்கிழியுடன் இவருக்கு ஆகத்து 2022-இல் வழங்கப்பட்டது.
பிற விருதுகள்
- பெரியாரியல் சிந்தனையாளர் விருது - இராசபாளையம் பெரியாரியல் சிந்தனை மையம்
- தமிழின அடையாள மீட்பர் விருது - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி
- சிறந்த தமிழறிஞர் விருது - இந்திய மருத்துவக் கழகம், திருச்சிராப்பள்ளி கிளை
- தமிழ் மெய்யியல் மீட்பர் - ஆசிரியர் குழு, கற்ப அவிழ்தம் (சித்த மருத்துவ மாத இதழ்)
- தமிழ் தேசப் புகழொளி விருது - தமிழ்த்தேசியப் பொதுவுடைமைக் கட்சி
இறுதிக்காலமும் மறைவும்
தன்இறுதிக்காலத்தில் ஆம்பூரை அடுத்த பனங்காட்டேரி பகுதியில் வேளாண் நிலம் வாங்கிக் கொய்யா, மிளகாய், கம்பு போன்ற பயிர்களை விளைவித்தார் நெடுஞ்செழியன். இயற்கை வேளாண்மை குறித்துப் பயிலரங்குகள், உழவர்களின் சிக்கல்கள் குறித்து தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதனிடம் உரையாடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்.
திருச்சி கே. கே. நகரில் வாழ்ந்துவந்த நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில்அரசின் துணையுடன் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அங்கேயே 4 நவம்பர் 2022 அன்று அதிகாலை 3 மணி அளவில் தனது 78-ஆம் அகவையில் காலமானார். அவர் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் அன்று மாலையே திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கே.கே.நகர் இராசா ராம் சாலையில் உள்ள மனிதம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் 5 நவம்பர் அன்று மாலையில் அன்பில் படுகைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
புகழ்
க. அன்பழகன் இவரை "‘தமிழ் மரபும், பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்" எனப் பாராட்டினார்.
நவம்பர் 2019-இல் இவரது "ஆசிவகமும் ஐயனார் வரலாறும்" என்றநூலை மறுவெளியீடு செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் பின்னாளைய தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், நெடுஞ்செழியனைத் ''தமிழின அடையாள மீட்பர்" எனப் புகழ்ந்தார்.
"தமிழர் சிந்தனை மரபை நிலைநிறுத்த கருத்தியல் தளத்திலும், களத்திலும் அவர் நிகழ்த்தியுள்ள போராட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும்" என்றார் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.
"தமிழ் வைணவ நெறியை ஆராய்ந்த நூல்களுள் பேராசிரியர் [ஃப்ரீட்ஹெல்ம்] ஹார்டி அவர்களின் 'விரகபக்தி' எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர் நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்"என்றார் ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனரான ஜி. ஜான் சாமுவேல்.