William Nevins

Sri Lankan author
The basics

Quick Facts

IntroSri Lankan author
PlacesSri Lanka
isAuthor
Work fieldLiterature
Religion:Christianity
BirthSanguveli, Sri Lanka
Death1889
Education
Jaffna Central CollegeJaffna, Jaffna District, Sri Lanka
The details

Biography

1850 நியாய இலக்கணம் நூலின் முன்னட்டை

முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை (1820 - 1889) வில்லியம் நெவின்ஸ் (William Nevins) அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்டவர். இவர் 19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை மிக்கவர். வைத்தியர் சாமுவேல் பிஸ்க் கிறீனின் மொழிபெயர்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தவர். ஆங்கில-தமிழ் அகராதியை உருவாக்கியவர். பிற்காலத்தில் இந்துக் கல்லூரிகள் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிளை பரப்பி வெற்றிகரமாக இயங்கிவந்த, இன்னும் முன்னணிக் கல்வி நிறுவனங்களாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு வித்தாக அமைந்த உள்ளூர்ப் பாடசாலையை (The Native Town High School) உருவாக்கியவர் இவரே.

ஆரம்பகாலம்

இவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சங்குவேலி என்னும் கிராமத்தில் 1820 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாரு என்பவருக்கு ஐந்தாவது மகவாகப் பிறந்தவர். தனது 12ம் வயதில் அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனால் வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவந்த செமினரியில் (Seminary) சேர்ந்து கல்வி கற்றார். ஒரு இந்துவான இவர் இக்காலத்திலேயே செமினரி நிபந்தனைகளுக்கு அமைய வில்லியம் நெவின்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர வடமொழியையும் கற்றார். அக்காலத்தில் கணிதத்தில் இவர் சிறந்த திறமைசாலியாக இருந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றிய நெவின்ஸ் செல்வதுரை இவரது மகனாவார்.

தொழில்

1840 இல் கல்வியை நிறைவு செய்துகொண்ட இவர் செமினரியிலேயே பணியில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அங்கே மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1855 இல் புகழ் பெற்ற பலரை உருவாக்கிய வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர் தமிழ் நாட்டுக்குச் சென்றார். அங்கே, பின்னர் வின்ஸ்லோ அகராதி எனப் பெயர்பெற்ற தமிழ் அகராதி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வின்ஸ்லோ என்பவருக்கு உதவியாக இருந்தார். அவருடன் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர். 1860 இல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினார்.

தமிழில் தர்க்கவியலை மொழிபெயர்த்து 1850-இல் நியாய இலக்கணம் - Elements of Logic என்னும் எனும் பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார்.

1860 ஆம் ஆண்டில் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்ததும், யாழ்ப்பாணத்தின் முதல் பாடசாலையுமான ஆங்கிலப் பாடசாலையான மத்திய கல்லூரியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 26 ஆண்டுகாலப் பணிக்குப் பின் 1886 இல் அக் கல்லூரியை விட்டு விலகினார். நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டிலேயே மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்த கட்டிடமொன்றில் சுதேச நகர உயர் பாடசாலை (The Native Town High School) என்ற பெயரில் பாடசாலையொன்றை உருவாக்கினார். 1889 இல் இப் பாடசாலையை வழக்கறிஞராக இருந்த நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்றபின்னர் அதே ஆண்டில் சிதம்பரப்பிள்ளை காலமானார்.

உள்ளூர் நகர உயர் பாடசாலையும், இந்துக்கல்லூரியும்

சிதம்பரப்பிள்ளையவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை 1890 இல் அக்காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வந்த சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பாடசாலை பின்னர் பொருத்தமான வேறிடத்துக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எனப் பெயர் பெற்றது.

எழுதிய நூல்கள்

முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல தன்னிலைச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

  • ஆங்கிலத் தமிழ் அகராதி (536 பக்கங்கள், 1858)
  • நியாய இலக்கணம்
  • இலக்கிய சங்கிரகம்
  • தமிழ் வியாகரணம்

மேற்கோள்கள்

The contents of this page are sourced from Wikipedia article on 29 Mar 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.