Biography
Lists
Also Viewed
Quick Facts
is | Poet | |
Work field | Literature | |
Gender |
| |
Birth | 10 August 1971 | |
Age | 53 years | |
Star sign | Leo |
Biography
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக் காட்சி, நடைபெறுவது வழக்கம். 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் அ. வெண்ணிலா உட்பட ஆறு ஆளுமைகளுக்கு கலைஞர் பொறிகிழி விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
சி.அம்பலவாணன்-வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாக 1971-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10-ம் தேதி வெண்ணிலா பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் பின்னர் உளவியலில் முதுநிலை, வணிகவியலில் முதுநிலை பட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து கல்வியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரது கணவர் மு. முருகேசும் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்து இயங்கிவரும் முக்கியமான கவிஞராக அறியப்படுகிறார்.
எழுத்துலக அறிமுகம்
சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய வெண்ணிலா தன்னுடைய 27 வது வயதில் எழுதத் தொடங்கினார். ஏழு கவிதை நூல்கள், ஒரு கடித இலக்கிய நூல், ஏழு கட்டுரைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஓர் ஆய்வு நூல் பதிப்பாசிரியராக இரண்டு நூல்கள், ஐந்து தொகுப்பு நூல்கள் என வெண்ணிலாவின் இலக்கியப் படைப்புகள் அணிவகுத்து நிற்கின்றன.
குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், நவீன வாழ்வியல், உணவு முறைகள், பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் போன்ற சமகாலச் சிக்கல்கள் குறித்த சிந்தனைகள் இவரது அனைத்து வகை இலக்கியங்களிலும் இடம்பெறுகின்றன. வரலாற்றை மறுவாசிப்பிற்குத் தூண்டும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி பதிப்பித்துள்ளார். வெண்ணிலாவின் படைப்புகளை இதுவரை 20 மாணவர்களுக்கும் மேற்பட்டோர் இளம் முனைவர் ஆய்வும், முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர்.
இலக்கியச் செயல்பாடுகள்
கரிசல் இலக்கியவாதி கி.ராவின் கதை சொல்லி மற்றும் புத்தகம் பேசுது இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவராக வெண்ணிலா செயல்பட்டுள்ளார். சாகித்ய அகாதமிக்காக தமிழ்நாடு, இலங்கை, ஆத்திரேலியா, கனடா, பிரான்சு நாடுகளில் வாழும் தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். 2002-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பன்னாட்டு பெண் எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 2011, சனவரியில் புது தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். ஒரிசாவில் நடைபெற்ற சார்க் இளம் கவிஞர்கள் மாநாடு, அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் தமிழகத்தின் பிரதிநிதியாக வெண்ணிலா பங்கேற்றுள்ளார்.
திரைப்பட அனுபவம்
சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாகவும் துணை இயக்குனராகவும் வெண்ணிலா பணியாற்றியுள்ளார். இரண்டு திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.
முக்கிய நூல்கள்
- பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் என்ற சிறுகதைத் தொகுப்பை ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கிறது.
- ராசேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு இவர் எழுதிய கங்காபுரம் என்ற வரலாற்று நாவல் அதிகம் பேசப்பட்டதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. நவீனப் பெண் எழுத்தாளர்களில் வெண்ணிலாதான் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்.
- 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் இடம்பெற்றுள்ள பெண்களான இராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரையிலான பல பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் உருவாக்கிய மீதம் இருக்கும் சொல் என்ற கதைத் தொகுப்பு தமிழுலகிற்கு ஒரு வரலாற்று ஆவணம்.
- கனவைப் போல மரணம் என்ற தலைப்பிலான இவர் நூலை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கியது.
- குங்குமம் தோழியில் தொடராக வந்த ததும்பி வழியும் மௌனம், ஆதியில் சொற்கள் இருந்தன, நீரில் அலையும் முகம், கனவிருந்த கூடு, இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்த மரணம் ஒரு கலை போன்றவை எளிய சொற்களால் ஆக்கப்பட்ட சில கவித்துவமிக்க புத்தகங்களின் பட்டியலாகும்.
படைப்பு நூல்கள்
கவிதை
- என் மனசை உன் தூரிகை தொட்டு – 1998
- நீரில் அலையும் முகம் - 2000
- ஆதியில் சொற்கள் இருந்தன – 2002
- இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம் – 2005
- கனவைப் போலொரு மரணம் - 2007
- இரவு வரைந்த ஓவியம் – 2010
- துரோகத்தின் நிழல் – 2012
- எரியத் துவங்கும் கடல் - 2014
கடிதம்
1. கனவிருந்த கூடு – 2000
கட்டுரை
- பெண் எழுதும் காலம் – 2007
- ததும்பி வழியும் மௌனம் - 2014
- கம்பலை முதல் - 2015
- தேர்தலின் அரசியல்- 2016
- அறுபடும் யாழின் நரம்புகள் – 2017
- எங்கிருந்து தொடங்குவது- 2017
- மரணம் ஒரு கலை - 2018
சிறுகதை
- பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில் – 2005
- பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் – 2013
- இந்திர நீலம் – 2020
ஆய்வு
- தேவரடியார் : கலையே வாழ்வாக – 2018
நாவல்
- கங்காபுரம் – 2018
- சாலாம்புரி - 2020
தொகுத்த நூல்கள்
- வந்தவாசிப் போர் - 250 - 2010 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து)
- நிகழ் முகம் – 2010
- மீதமிருக்கும் சொற்கள் - 2015
- காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது - 2015
- கனவும் விடியும் – 2018
செம்பதிப்பு
- இந்திய சரித்திரக் களஞ்சியம், 8 தொகுதிகள் – 2011
- ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி – 2019 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து)
விருதுகள்
- சிற்பி அறக்கட்டளை விருது
- கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
- ஏலாதி அறக்கட்டளை விருது
- கவிஞர் வைரமுத்து வழங்கும் ‘கவிஞர் தின விருது’
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி – 2005 விருது
- சென்னை புத்தகக் கண்காட்சி – 2005 ஆம் ஆண்டில் இயக்குநர் பார்த்திபன் வழங்கிய சிறந்த படைப்பாளி விருது
- நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2005 இல் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது.
- தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான விருது - 2008
- செயந்தன் நினைவு கவிதை விருது’ - 2010 தமிழக ஆளுநர் வழங்கியது
- பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2013’
- கங்காபுரம் நாவலுக்காக: கோவை கத்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது , சமயபுரம் எசு.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது, அவள் விகடனின் ‘இலக்கிய விருது
- 2021 ஆம் ஆண்டுக்கான புதுமைப் பித்தன் படைப்பிலக்கிய விருது